தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் விதமாக சென்னையில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டார்.
புகைப்படக் கண்காட்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமைச்சர் வேலு அழைப்பில் தான் இங்கு வந்துள்ளேன். திருவண்ணாமலைக்கு வருவது இது முதல் தடவை இல்லை. கோவிலுக்கும் படப்பிடிப்பிற்கும் அதிக முறை வந்துள்ளேன். அப்பாவின் நண்பர் இவர். அந்த அன்புக்காக வந்துள்ளேன். இம்மாதிரியான ஒரு புகைப்படக் கண்காட்சியை வேறு எங்கு பார்க்க முடியும். மிக அழகாக வடிவமைத்துள்ளார்கள். இந்த புகைப்படக் காட்சியை மிக சிறப்பாக கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் நன்றி. இதுபோல் வேறு எங்கும் பார்த்ததில்லை. ஒரு கதையை சினிமா போல் கண் முன் காட்டியுள்ளார்கள். ஒரு சகாப்தத்தை கண் முன் காட்டியுள்ளார்கள்.
முதலமைச்சர் மேயராக இருந்தபோதே அவரை நமக்கு தெரியும். அவர் என்ன சாதனைகளை செய்துள்ளார் என்றும் தெரியும். அதை எடுத்து சொல்வது போலவும் அவரது குண நலன்களையும் மிக அழகாக காட்டியுள்ளார்கள். நம்ம என்ன கலர் சட்ட போட்டாலும் மனம் வெள்ளை தான். அது தான் முக்கியம். இந்த தூய்மையான மண்ணிற்கு வந்தது மிகுந்த சந்தோஷம். முதல் தடவை என் மனைவியும் திருவண்ணாமலை வந்துள்ளார். அவர் இதுவரை வந்ததில்லை. தற்போதைய ஆட்சியின் சிறப்புகள் நான் சொல்ல வேண்டியதில்லை. நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதிகமான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே ஆசை” எனக் கூறினார்.