





சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி தலை வேறு உடல் வேறாக கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடலை நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளம் அருகே வீசி விட்டுச் சென்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருந்தது.
அவர், தன்னுடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இதைப் பிடிக்காத தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட கும்பல் கோகுல்ராஜை கடத்திச் சென்று சாதி ஆணவக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின்போது ஒருவர் கொல்லப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மற்ற 15 பேரை மட்டும் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்து விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மதுரை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி தீர்ப்பு அளித்தது. இவர்களில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முக்கியக் குற்றவாளியான யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை விதித்ததோடு, அவர் இறுதிமூச்சு உள்ளவரை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை வழங்கக்கோரி அவரும் மேல்முறையீடு செய்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட காலகட்டத்தில் யுவராஜ் தரப்புக்கு எதிராக சாட்சி சொன்ன கோகுல்ராஜின் தோழி சுவாதி, வழக்கு விசாரணையின்போது பிறழ்சாட்சியாக மாறினார். இதனால் அவர் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. தீர்ப்பில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 பேர் விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவும் காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யுவராஜ்க்கு வழங்கப்பட்ட ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டுமென்ற தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்பைத் தொடர்ந்து கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இந்த வழக்கில் அடிப்படையான ஒன்றே ஒன்று சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது என்பது தான். சிசிடிவி ஃபுட்டேஜ் என்பது விஞ்ஞானம் வளர்ந்திருக்கக் கூடிய காலத்தில் அதை சாட்சியமாக ஏற்றுக் கொண்டதால் அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் சான்றாக இவர்கள் சந்தித்ததை நிரூபித்திருக்கிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்படாத இன்வெஸ்டிகேஷனின் வரையறைக்குள்ளேயே வராத புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபர் கார்த்திகைசெல்வன் தலைமறைவாக இருந்த யுவராஜ் உடன் எடுத்த பேட்டி. அவர் சரண்டர் ஆவதற்கு முன்பாக விஷ்ணுபிரியாவின் தற்கொலை சம்பந்தமாக ஒரு பேட்டி வைத்தார்கள். அந்த கலந்துரையாடலின் போது யுவராஜ் தானாக வந்து கலந்து கொள்கிறார். அப்பொழுது தொலைக்காட்சி நிருபர் கேட்ட கேள்வியின் போது யுவராஜ் மலைக்கு போனதையும், கோகுல்ராஜையும் சுவாதியையும் சந்தித்ததையும், அவர்களிடமிருந்து செல்போனை பிடுங்கியதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த வழக்கை பொறுத்தவரை இது ஒரு சிறப்புச் சட்டம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்முறை தொடர்பான சட்டம். இந்த வழக்கில் எட்டாவது பிரிவு மிகவும் முக்கியமானது. அதில் அரசு தரப்பில் மிக முக்கியமான மூன்று விஷயங்களை நிரூபித்தால் போதும். பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டவர் ஒரு பழங்குடியினராகவோ, தலித்தாகவோ இருந்தால் போதும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலித் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். கொலை செய்யப்பட்டிருக்கிற கோகுல்ராஜ் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். குற்றவாளிகள் அனைவருமே தலித் அல்லாதவர்கள் என நிரூபித்திருக்கிறோம். இந்தியாவில் பல தீர்ப்புகளை பார்த்திருக்கிறோம். எல்லா தீர்ப்புகளிலும் இல்லாத வகையில் எட்டாவது பிரிவை கோகுல்ராஜ் வழக்கில் மட்டும்தான் முதல் முறையாக பயன்படுத்தி மிகத் தீர்க்கமாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.