நித்தியானந்தா என நினைத்து எனது ஆசிரமத்தை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஸ்கரானந்தா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கர்ணம்பேட்டை பகுதியில் செல்வக்குமார் என்பவரது இடத்தில் பாஸ்கரானந்தா என்பவர் ஆசிரமம் ஒன்றை கட்டி வருகிறார். வெளியூரில் இருந்த பாஸ்கரானந்தாவிற்கு ஆசிரம கட்டிடம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் தனது ஆசிரமம் தரைமட்டமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பல்லடம் காவல்நிலையத்திற்கு தனது பக்தர்களுடன் சென்று புகாரளித்தார். மேலும் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து வெளியான வீடியோ பதிவில், “பதித்து வைக்கப்பட்டிருந்த வைரங்களையும் சாமி சிலைகளையும் காணவில்லை. முருகன் சிலை மற்றும் அம்பாள் சிலை வைத்திருந்தேன். வைரம் வைடூரியம் கிட்டத்தட்ட 108 வைரங்கள் வைத்திருந்தேன். இரண்டும் சேர்த்து 216ம் காணவில்லை. 9 நவரத்தினங்களும் 216 எண்ணிக்கையில் இருந்தது. அத்தனையும் காணவில்லை என கூறியுள்ளார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சாமியார் பாஸ்கரானந்தா, “நாம நல்லது செய்யனும்னு சொல்லி தான் கோவில் கட்டுகிறோம். பிரச்சனைகளை உண்டு பண்ணவா கோவில் கட்டுகிறோம். இந்த கோவில் எழும்பும் வரை அமைதியாக இருந்தவர்கள் இந்த மாத இறுதியில் கும்பாபிஷேகம் நடத்த நான் தேதி குறித்தவுடன் கோவிலை இடித்துள்ளனர். அப்போ என் ஆன்மீக பணியின் வளர்ச்சி இந்த பகுதியில் மக்களுக்கு நான் செய்ய நினைக்கும் நலத்திட்டங்கள் எல்லாத்தையும் முடக்கனும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்ட சதியுடன் தான் இதை இடித்துள்ளனர் என நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.