அண்மையில் மத்திய அமைச்சர் அமித் ஷா 'இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டிய தருணம் இது' என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழகத்தில் அதற்கு எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி' என்று கருத்து தெரிவிக்க, பல்வேறு பிரபலங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினர். இதற்கு முன்பே இதேபோன்ற இந்தி திணிப்பு தொடர்பான பேச்சுக்கள் தமிழகத்தில் உருவானபோது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் இடம்பெற்ற டி ஷர்ட் அணிந்திருந்தது ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் திரைப்பட நடிகை சுகாசினி இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேச வேண்டும் என்றால் இந்தி கற்றுகொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். பிரபல நகைக்கடை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாசினி, ''நான் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல... தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா எல்லாம்தான். மலையாள படத்தைதான் இப்போ இந்தியா ஃபுல்லா பார்க்கிறார்கள். பகத் பாசிலையும், துல்கரயும் தெரியாதவர்கள் யாருமே கிடையாது. ரோஜா, பாம்பே எல்லாம் அங்கு (வடஇந்தியா) போன மாதிரிதான் இது. சவுத் இந்தியன் படங்களுக்கு நல்ல எக்ஸ்போஸர் இருக்கு. மலையாளம் குவாலிட்டியில் நல்லா இருக்கு, தமிழ் தரமாக இருக்கு, தெலுங்கு மாஸா இருக்கு, கன்னடம் நாம யோசிக்க முடியாத அளவுக்கு முன்னாடி போய்க்கொண்டிருக்கிறது. எங்களுக்கு எல்லா லாங்க்வேஜூம் தெரிஞ்சே ஆகணும். எல்லா லாங்க்வேஜயும் மதிச்சே ஆகணும். எங்க வீட்ல காலையில கூப்பிடுற லேடி தெலுங்கில் பேசுவாங்க... ராத்திரி கூப்பிடுறவரு இந்திதான் பேசுவாரு... எனக்கு அதுதான் பிடிக்கும் இதுதான் பிடிக்கும்னா சாப்பாடு கிடைக்குமா? எல்லாரும் எல்லா மொழியையும் சமமா நினைக்கணும். இந்தி ஒரு நல்ல லாங்குவேஜ், கத்துக்கணும். முக்கியம் இந்தி பேசுறவங்க நல்லவர்கள்.. சோ அவர்கள்கூட பேசணும்னா இந்தி கத்துக்கணும். என்கிட்ட எந்த மொழி பெரியது என கேள்வி கேட்டால் எனக்கு பதிலே சொல்ல தெரியல... எவ்வளவு லாங்குவேஜ் தெரியுதோ அவ்வளவு சந்தோசம் எனக்கு... பிரெஞ்சு கூட எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார்.