தமிழகம் முழுவதும் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், கிராமத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட மிகவும் சிரமமாக இருந்துவருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தியும் பல போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சியைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், தற்போது கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து சென்னை சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க போவதாக முடிவெடுத்தனர்.
இந்த தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, பண்ருட்டி உட்கோட்டை இன்ஸ்பெக்டர்கள் அசோகன், நந்தகுமார், ராஜ தாமரை, பாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள 25 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களை பண்ருட்டி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வரவழைத்தனர்.
அதன்படி ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் அங்கு வருகை தந்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி. சபியுல்லா, வட்டாட்சியர் கார்த்திகேயன், ஒன்றிய ஆணையர்கள் விஜயா திருநாவுக்கரசு, ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சு வார்த்தையில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஊராட்சிகளுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட பல உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், தலைவர்களுக்கு எதிராகவே நடக்கிறார்கள் என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
அவர்களிடம் டி.எஸ்.பி. சபியுல்லா, சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் தற்போதைக்கு சென்னை செல்ல வேண்டாம். வரும் 24ஆம் தேதி அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் வரவிருக்கிறார். அவர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட 25 ஊராட்சி மன்ற தலைவர்களும் சென்னை செல்லும் திட்டத்தை ஒத்திவைப்பதாக முடிவெடுத்துள்ளனர்.