இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், ''யார் எந்த தொகுதியில் நிற்பார்கள் என்பதை திமுக தலைவர்தான் முடிவெடுக்க முடியும். ஒரு மிகுந்த நம்பிக்கையோடு மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். ஒன்றிய அரசு ஒரு நல்ல அரசாக, மக்களை மதிக்கக்கூடிய அரசாக, மாநில உரிமைகளுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய அரசாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கிறார்கள்.
மக்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கிறது. உதாரணத்திற்கு ஜிஎஸ்டியில் பல குழப்பங்கள் இருக்கிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட, சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள பாதிப்பிற்கு கூட ஒன்றிய அரசாங்கம் எந்த நிதி உதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று உறுதியோடுதான் எங்களிடம் கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.