2014ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ தங்கக் கவசத்தினை முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள வங்கியில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளன்று, அதிமுக பொருளாளரும், முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் பெற்றுச் செல்வர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தங்கக் கவசத்தினை பெற முயற்சித்து வருகிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது “தங்க கவசத்தை பெறுவதற்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருகிறார். ஆனால் தங்க கவசத்தை பெறும் அதிகாரம் அதிமுக பொருளாளரான எனக்கே உள்ளது. வங்கி அதிகாரிகள் என்னிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க மறுக்கின்றனர். வரும் 30ம் தேதி முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளை முன்னிட்டு தங்க கவசத்தை எடுத்துச் செல்ல சட்ட விதிகளின்படி இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும். வங்கி கணக்கை நான் பயன்படுத்தும் படி எனக்கு அதிகாரம் வழங்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்” என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.