நக்கீரன் ஆதாரத்துடன் வெளியிட்ட செய்தியால் கைது செய்யப்பட இருக்கிறார் மதுரையைச் சேர்ந்த போலி தேர்வர் விக்னேஷ். இவரை தேர்வு எழுத வைத்த மதுரையைச் சேர்ந்த பிரபல டைப்ரைட்டிங் பயிற்சி மையத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட இருப்பதால் தமிழகம் முழுக்க குரூப் 4 டைப்ரைட்டிங் தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வர இருக்கிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-4 தேர்வானது தற்போது சி.சி.எஸ். தேர்வு (COMBINED CIVIL SERVICES EXAMINATION) என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், டைப்பிஸ்ட் எனப்படும் தட்டச்சுப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே, தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் (Directorate Of Technical Education) நடத்தும் டைப் ரைட்டிங் தேர்வில் தேர்ச்சிபெற்றிருந்தால் சுமார் 10 மதிப்பெண்களிலிருந்து 20 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும். அதனால், பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு தனியார் டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து டைப் ரைட்டிங் தேர்வையும் முடித்துவிட்டு சி.சி.எஸ். தேர்வு எழுதி டைப்பிஸ்ட் பதவியை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில்தான், விடைத்தாள் மாற்றும் மோசடி நடக்கிறது” என்றவர்களிடம் எப்படி நடந்தது மோசடி? என்று நாம் கேட்டபோதுதான் அதிர்ச்சியூட்டும் தகவல்களை விவரிக்கிறார்கள் நம்மிடம் பேசிய தேர்வர்கள்,
“டைப் ரைட்டிங் தேர்வு எழுதக்கூடியவர் எந்த மையத்தில்? யார் பக்கத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதவேண்டும்? என்பதையெல்லாம் டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்களே தீர்மானிக்கிறார்கள். உதாரணத்துக்கு, தனது இன்ஸ்டிடியூட்டில் 100 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள் என்றுவைத்துக்கொள்வோம். இதில், 10 பேரை பணம் வாங்கிக்கொண்டு தேர்ச்சிபெற வைக்கவேண்டும் என்றால் ஏற்கனவே டைப் ரைட்டிங் தேர்வில் ஜூனியர், சீனியர் தேர்வுகளில் நன்றாக எழுதி தேர்ச்சிபெற்ற ஸ்பீடாக டைப் செய்யத்தெரிந்த 10 பேரை கூடுதலாக விண்ணப்பிப்பார்கள் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்கள்.
தேர்வின்போது புதிதாக தேர்வு எழுதுகிறவரா? ஏற்கனவே, தேர்வெழுதி தேர்ச்சிபெற்றவரா? என்பதை எக்ஸாம் ஹால் சூப்பர்வைஸர்களுக்கு தெரியாது.
முதல் பேப்பர் தமிழ் அல்லது ஆங்கிலம்… பத்துநிமிடங்கள்தான் தேர்வு. அதில், 10 நிமிடங்களில் வேகமாக பிழையில்லாமல் எவ்வளவு டைப் செய்கிறோமோ அதற்கேற்றார்போல்தான் மதிப்பெண். அப்படி, டைப் செய்யும் விடைத்தாளைத்தான் மாற்றுகிறார்கள். இரண்டாவது பேப்பர் தேர்விலும் இப்படித்தான். ஒரு மையத்தில் சுமார் 200 பேர்வரை தேர்வு எழுதுவார்கள். இதனால், யாருடைய விடைத்தாளை யார் மாற்றுகிறார் என்பதை கண்டுபிடிப்பது சிரமம். அப்படியே, தெரிந்தாலும் தனியார் இன்ஸ்டிடியூட்டுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளவுமாட்டார்கள்.
உதாரணத்துக்கு, கடந்த 2019 பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த டைப் ரைட்டிங் தேர்வில் மதுரையிலுள்ள ஸ்ரீ நாதன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் என்னும் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஏற்கனவே தேர்ச்சிபெற்ற விக்னேஷ் மற்றும் இன்னொருவர் என இரண்டுபேரை மீண்டும் தேர்வு எழுதவைத்து முதல்நாள் 5 பேட்ச் தேர்வுகளில் 10 பேரையும் இரண்டாவதுநாள் 4 பேட்ச்களுக்கு நடந்த தேர்வுகளில் 8 பேரையும் என 18 பேருக்காக தேர்வு எழுதியிருக்கிறார்கள்” என்று அதிர்ச்சி குற்றச்சாட்டை வீச…
இதுகுறித்து, ஸ்ரீ நாதன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் எனப்படும் டைப் ரைட்டிங் பயிற்சிமையத்தின் உரிமையாளர் செல்லதுரையை தொடர்புகொண்டு நாம் விளக்கம் கேட்டபோது, விக்னேஷ் ஏற்கனவே தேர்ச்சி பெற்றதை முதலில் மறுத்தவர் பிறகு ஒப்புக்கொண்டு, “எனது இன்ஸ்டிடியூட்டில் எனக்கு உதவியாக இருக்கும் விக்னேஷ் மீண்டும் தேர்வு எழுதியது முன்பைவிட கூடுதலாக மார்க் எடுக்கவேண்டும் என்பதால் தேர்வு எழுதியிருப்பார்” என்று சமாளித்தவரிடம்,
முதுநிலையில் ஏற்கனவே தேர்ச்சிபெற்ற விக்னேஷ் தற்போது ஏன் தேர்ச்சிபெறவில்லை? அவர், விடைத்தாளை மாற்றிக்கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் மரகதம் எப்படி தேர்ச்சிபெற்றார்?” என்று நாம் கேட்டபோது, முறையான பதில் இல்லை.
இகுறித்து, தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தை தொடர்புகொண்டபோது, மண்டல அதிகாரி பாலச்சந்திரன் நம்மிடம், “ஏற்கனவே, தட்டச்சு முதுநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மீண்டும் தேர்வு எழுதினால் அது மோசடிதான். அவர், மீதும் அவரை எழுதவைத்த இன்ஸ்டிடியூட் உரிமையாளர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விடைத்தாள் மாற்றம் நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரணை செய்யப்படும். ஏற்கனவே, தேர்வு எழுதியவர்கள் மீண்டும் தேர்வு எழுதாமல் இருக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கொண்டுவர இருக்கிறோம். இதுகுறித்து, புகார் எல்லாம் தேவையில்லை. நக்கீரன் செய்தியை வைத்தே விசாரணை நடத்தப்படும். ”என்றார் அவர்.
இதுகுறித்து, கடந்த 2019 மே மாதம் 22-24 தேதியிட்ட நக்கீரனில் 'விடைத்தாள் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சியில் தொடரும் சீட்டிங்!' என்ற தலைப்பில் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டோம்.
ஆனால், பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தனியார் டைப்ரைட்டிங் உரிமையாளர்கள் இவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் இவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அதனால், இதுகுறித்து விளக்கம் அறிய மண்டல இயக்குனர் பாலச்சந்திரனை எஸ்.எம்.எஸ் அனுப்பி பலமுறை தொடர்பு கொண்டபோதும் போனை எடுக்க மறுத்துவிட்டார். அதற்குப் பிறகு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் தேர்வு கட்டுப்பாட்டு கூடுதல் இயக்குனர் அருளரசுவிடம் பேசினோம். அவர் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். ஆனால், அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ன காரணம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர அருளரவை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, நக்கீரனில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு போலியாக தேர்வு எழுதிய விக்னேஷ், போலியாக தேர்வு எழுத வைத்த ஸ்ரீ நாதன் பயிற்சி மையத்தின் உரிமையாளர் செல்லதுரை, முறைகேடாக தேர்வு எழுதிய மரகதம் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தி விட்டோம்.
போலியாக தேர்வு எழுதியதை எங்களது ஒப்புக்கொண்டார்கள் விக்னஷும் செல்லதுரையும். எங்களது ஆணையரின் ஒப்புதலுக்குப்பிறகு, மதுரையில் காவல்துறை ஆணைரிடம் புகார் கொடுக்க இருக்கிறோம்" என்றார்.
நக்கீரன் செய்தி வெளியாகி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. அதற்குப் பிறகு பலமுறை தொடர்பு கொண்டபோதும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் டைப்ரைட்டிங் பயிற்சி மைய உரிமையாளர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால்தான் இவர்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. போலி தேர்வர் விக்னேஷ் , போலியாக தேர்வு எழுதி வைத்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் செல்லதுரை உள்ளிட்டவர்கள் கைது செய்வதோடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் சிபிசிஐடி விசாரித்தால்தான் தமிழகம் முழுக்க குரூப் 4 டைப்ரைட்டிங் தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலத்துக்கு வரும்.