கோடை காலங்களில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் காவல்துறையினர் கடும் வெயிலில் நின்று கொண்டே போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
வெயில் தாக்கத்தால் காவல்துறையினரின் இயல்பான உடல் வெப்பநிலை உயர்ந்து விடுகிறது. இதனால் உடலில் நீர் வற்றி, டீஹைட்ரேஸன் நிலை ஏற்படுகிறது. மேலும், பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
இதனால் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் காவல்துறையினருக்கு காலை 11.00 மணிக்கும், மாலை 04.00 மணிக்கும் உடல் சூட்டைத் தணிக்கும் வகையில் எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வெயிலில் இருந்து தலையைப் பாதுகாக்க தெர்மாகோல் மூலம் தயாரிக்கப்பட்ட பிரத்யேக தொப்பியும் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா, போக்குவரத்துக் காவல்துறையினருக்கு பழச்சாறு மற்றும் தெர்மாகோல் தொப்பி வழங்கும் சேவையை வியாழக்கிழமை (மார்ச் 3) தொடங்கி வைத்தார். துணை ஆணையர் மோகன்ராஜ், உதவி ஆணையர்கள் உதயகுமார், வெங்கடேசன், நகர காவல் ஆய்வாளர் சம்பங்கி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.