Skip to main content

சடலத்தைப் புதைக்க மயானம் இல்லை; தவிக்கும் பட்டியலின மக்கள்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

There is no place to cremate the deceased in Vaniyambadi

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் ஆயர்பாடி. இக்கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் இல்லாததால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமாஞ்சோலை பெரியார் நகர் பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வந்தனர். ஆயர்பாடி கிராமத்தில் வசித்துவரும் கட்டடத் தொழிலாளி முருகன் என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நவம்பர் 8 ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் என அனைவரும் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

 

அவரை அடக்கம் செய்வதற்கான வேலைகளை செய்வதற்காக அதற்கான பணியாளர்கள் திருமாஞ்சோலை சுடுகாட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் தங்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உங்கள் ஊரிலேயே நீங்கள் அடக்கம் செய்துகொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர். தங்கள் ஊரில் சுடுகாடு இல்லாத நிலையில் என்ன செய்வது என யோசித்த மக்கள், இறந்தவரின் மனைவி, உறவினர்கள், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இறந்தவரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம், எங்கள் கிராமத்துக்கு மயானம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். உடனே எப்படி ஏற்பாடு செய்வது எனக் கேள்வி எழுப்பிய அதிகாரிகள், இவ்ளோ நாள் எங்கே அடக்கம் செய்தீங்களோ அங்கேயே அடக்கம் செய்யுங்க என்றனர்.

 

There is no place to cremate the deceased in Vaniyambadi

 

அவர்கள் தங்கள் கிராம எல்லைக்குள் வரக்கூடாது எனக் கூறினர். அக்கிராமத்தில் எதிர்த்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள், இந்த ஊருக்கு மயானம் அமைத்து கொடுக்காவிட்டால் அடுத்த முறை யாராவது இறந்தால் நேரடியாக சடலத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து வைத்துவிடுவோம் என்று ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அம்மக்களை பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்திய அதிகாரிகள் இக்கிராமத்துக்கு விரைந்து மயானம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அதன்பின்னர் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புடன் வழக்கமாக அடக்கம் செய்யும் இடத்திலேயே உடலை அடக்கம் செய்ய வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்