Skip to main content

'தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை' - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

tamilnadu oxygen high production chennai high court tn govt

 

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் ஆகியவற்றை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பிற்பகல் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ள நிலையில், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துகள் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ள நிலையில், அதனை தமிழக அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. 

 

இந்தச் செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. தமிழகத்தில் போதிய அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளதா? ரெம்டெசிவிர் மருந்து தமிழகத்தில் போதிய அளவு உள்ளதா? தேவையான அளவு வெண்டிலேட்டர் வசதி உள்ளதா? என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசுத்துறை செயலாளர்களிடம் விளக்கம் பெற்று இன்று (22/04/2021) மதியம் 02.15 மணிக்கு நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று மதியத்திற்கு ஒத்தி வைத்தனர். 

 

அதைத் தொடர்ந்து, வழக்கு இன்று (22/04/2021) பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை. தமிழகத்தில் மருத்துவ பதற்ற நிலை எதுவும் நிலவவில்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 31,000 ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது. தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது; தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து இல்லை; அரசிடம் உதவி கேட்டுள்ளார்கள்" எனத் தெரிவித்தார். 

 

இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்