சமீபத்தில் வெளியாகி அனைவரின் மனதிலும் அவர்களது பள்ளிக்கூட நினைவுகளை திரும்ப பார்க்கச் செய்தது 96 படம். சென்னையில் அந்தப் படப்பாணியில், 95 என்ற தலைப்பில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள ஆறுமுக நாடார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 1995-ல் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவிகள், 23 ஆண்டுகளுக்கு பின் அனைவரும் 96 படப்பாணியில் சந்திக்க திட்டமிட்டனர். அந்த ஆண்டு பயின்ற 50 மாணவிகளில் 36 மாணவிகள் பல ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து ஒருவருக்கு ஒருவர் தங்கள் அன்பை பகிர்ந்துகொண்டனர்.
மஞ்சுளா மற்றும் வைஜெயந்தி ஆகியோர் ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். முதலில் மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அங்கு அனைவரும் ஒன்றுதிரண்டனர். பல வருடங்களுக்குப் பின்பு சந்திப்பதால் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தங்கள் அன்பை பகிர்ந்துகொண்டனர். அதிலும் ஒரு சிலர் ஒருவருக்கு இருவர் முத்தத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் ஆனந்த கண்ணீர் சிந்தி அவர்களின் அன்பை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வை கண்டு, கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் சிலர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
அனைவரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டனர். சிறு பிள்ளைகள்போல கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடி மகிழ்ந்தனர். பிறகு அனைவரும் மத்திய உணவிற்கு சென்று, விரும்பியதை சாப்பிட்டு கண்ணீருடன் பிரியாவிடை பெற்றனர். இந்தசம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.