
பிரிக்கால் தொழிலாளர்களின் பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஏ அய் சிசிடியு மாநில செயலாளர் குமாரசாமி தெரிவித்ததாவது:
கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச்சங்கத்தின் சார்பாக கடந்த 14 ஆம் தேதி கோவையில் உண்ணாவிரதமும், சென்னையில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது . இதனையடுத்து பிரிக்கால் நிர்வாகம் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட 144 தொழிலாளர்களை பகுதி நேர கதவடைப்பு செய்துள்ளது. தொழிலாளர்களின் மீது எந்த குற்றச்செயல்களும் இல்லாத நிலையில் ஊகத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஏஅய்சிசிடியு மாநிலச்செயலாளர் குமாரசாமி குற்றம் சாட்டினர். மேலும் பிரிக்கால் நிறுவனத்தில் 1200 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், 700 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களது சங்கத்தில் உறுப்பினராக இருப்பதாக தெரிவித்தார். 2018 மேற்கொண்ட தண்டனைகள், பிடித்தங்களையும் நிறுத்தி, 144 பேர் கதவடைப்பை நீக்க வேண்டும். நிர்வாகம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்தல் நடத்தி பெரும்பான்மை அறிந்து அந்த சங்கத்தோடு ஒப்பந்தம் பேச முன்வருமானால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தவிர்த்து ,பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்த்துகொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். நிர்வாகம் தனது முடிவு குறித்து தெரிவிக்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இடைப்பட்ட காலத்தில் கதவடைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.