வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடும் எண்ணம் இல்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேசுகையில், ''போன மாதம் 29ஆம் தேதி வந்த பொழுதும் உங்களிடம் சொன்னேன் கூட்டணி எல்லாம் சில கட்சிகளோடு பேசிக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் முடிவுக்கு வந்த பிறகு நானே சொல்வேன். வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கும் இல்லை. எங்களுடைய நிர்வாகிகள் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் வார்த்தைக்கு நாங்கள் மரியாதை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை.
வேண்டும் என்றால் பரிசீலித்து முடிவு செய்யலாம் என்று இருக்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் பெரிய திருட்டுகள், கொடுமையான தாக்குதல்கள், கொலைகள் என எனக்கு தெரிந்த இந்த இரண்டு வருடத்தில் நிறைய நடந்திருக்கிறது. வீட்டில் இருக்கும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாம் தாக்கியது யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உங்கள் மாவட்டத்தில் பிரச்சனைகள் இருக்கிறது. அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சீர்கெடவில்லை என்று சொல்பவர்கள் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் இங்கு வந்து இருந்தார்கள் என்றால் தெரியும் எதார்த்த நிலை. சண்டிகர் மேயர் தேர்தல் போல எங்கோ ஒரு இடத்தில் முறைகேடு நடந்தால் அது இந்தியா முழுமைக்கும் எல்லா இடத்திலும் நடந்தது என்று சொல்ல முடியாது. 2006 மாநகராட்சி தேர்தலில் திமுக கையில் கத்தியை எடுத்துக்கொண்டு மதுரையில், சென்னையில் தேர்தல் நடத்தியது தெரியாதா? திருமங்கலம் இடைத்தேர்தல் எப்படி நடந்தது என்று தெரியும்'' என்றார்.