சென்னை ஐ.ஐ.டி.யில் எந்தவித சாதிய பாகுபாடும் இல்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்டர் தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று (13.07.2021) ஆய்வு மேற்கொண்டு, ஐ.ஐ.டி. நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்டர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஐ.ஐ.டி.யில் எந்தவித சாதிய பாகுபாடும் இல்லை எனவும் பாகுபாடு இருப்பது போன்று வெளியில் இருந்து செயற்கையாக சிலர் பொய்யான தகவலைக் கூறிவருவதாக தெரிவித்தார். சாதிய பாகுபாடு இருப்பதாக ஆணையத்திற்கு எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை எனக் கூறிய அவர், அப்படி புகார் வந்தால் அந்தப் புகார் மீது உடனடியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். மேலும், ஐ.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுவதாகவும் விண்ணப்பிக்கப்படும் தாழ்த்தப்பட்டோரில் தகுதி உள்ள நபர்களுக்குப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுவருவதாகவும்” அருண் ஹால்டர் தெரிவித்தார்.