கடலுார் அடுத்த கோண்டூரை சேர்ந்தவர் செல்வராஜ்(54). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி அல்லு புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக உள்ளார். இவர்களது மகன் வெளியூரில் டாக்டருக்கு படித்து வருகிறார். மகள் பிளஸ் 2 முடித்து விட்டு வெளியூரில் உள்ளார்.
செல்வராஜ் கோண்டூரிலுள்ள தனது வீட்டின் தரை மற்றும் முதல் தளத்தை வாடகைக்கு விட்டு விட்டு இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார். நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலை வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறந்து அதிலிருந்த 20 சவரன் நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், கடலுார் புதுநகர் ஆய்வாளர் (பொறுப்பு) பால்சுதர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்தனர்.
மேலும் கைரேகை நிபுணர் பாபு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில் கட்டில் படுக்கையின் அடியில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் நன்கு அறிமுகமானவர்களே வீட்டிற்குள் புகுந்து திருடி இருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.