
திருச்சி மாவட்டம், துறையூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (30). இவர், பன்றி பண்ணை மற்றும் இறைச்சிக் கடை நடத்திவருகிறார். வழக்கமாக சந்தோஷ்குமார், சனிக்கிழமைதோறும் தனது வீட்டில் தங்காமல் கறிக்கடையிலேயே தங்கி வியாபாரம் செய்வது வழக்கம். அதுபோல் சனிக்கிழமை (04.12.2021) இரவு தனது வீட்டைப் பூட்டிவிட்டுக் கறிக்கடைக்குச் சென்று தங்கியுள்ளார். சந்தோஷ்குமாரின் மனைவியும் அவர்களின் குழந்தைகளும் ஆந்திராவில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டனர். இதனைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், சந்தோஷ்குமாரின் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளை அடித்துள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை, சந்தோஷ்குமார் வீட்டிற்குப் பால்காரர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர், சந்தோஷ்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்த சந்தோஷ்குமார், வீட்டின் கதவு உடைந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் 13 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.
சந்தோஷ்குமார், தனது வீட்டில் கொள்ளை நடந்த கொள்ளை சம்பவம் பற்றி துறையூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.