தமிழ்நாடு முழுவதும் விவசாயகள் தங்கள் தோட்டங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை அந்தந்த கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களில் அள்ளிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு அனுமதியைத் தொடர்ந்து தற்போது வண்டல் மண் எடுப்பதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் அள்ளப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்கும் போதே, ஆழமாக வெட்டக்கூடாது, குறிப்பிட்ட அளவே மண் எடுக்க வேண்டும். டிராக்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. கூடவே மண் எடுக்கும் வாகனங்கள் பற்றிய பதிவு எண் ஆகியவற்றை பெற்று அனுமதி கடிதத்தில் குறிப்பிட்ட வேண்டும். குறிப்பிட்ட விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை வருவாய் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டு அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் எத்தனை வாகனம் ஓட்டப்படுகிறது என்பதை எல்லாம் கண்காணித்து பெரிய வசூல் வேட்டையாடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி, ஆலங்குடி உள்பட பல தாலுகாவை சேர்ந்த கண்காணிப்பு அதிகாரிகள் ஒரே நாளில் ஒரு லட்சம் வரை வசூல் செய்து முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளனர். இதனால் அரசின் விதிமுறைகள் காற்றில்பறக்கும் தூசுகளாக பறந்து வருகிறது.
அதே போல அறந்தாங்கி தாலுகாவில் உள்ள தினையாகுடி கிராமத்தில் உள்ள நமரங்குர் ஏரியில் வண்டல் மண் எடுக்க அந்த ஊலே இல்லாத ராஜ்மோகன் என்பவருக்கு ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அனுமதி அளித்துள்ளனர். அதில் மண் எடுக்க பயன்படுத்தும் 3 வாகனங்களின் எண்களும் பதிவு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற வாகனங்களைவிட பல மடங்கு வாகனங்கள் மண் அள்ளிச் சென்றதை கவனமாக பார்த்துக் கொண்டனர் கண்காணிப்பு அதிகாரிகள்.
ஆனால் மண் எடுக்க பயன்படுத்திய வாகன எண்களை சிலர் இணையத்தில் தேடிய போது, பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது TN 55 BH 4363 என்ற எண்ணை ஆய்வு செய்யும் போது அது டி.வி.எஸ்.எக்ஸ்.எல் வாகனம் என்பதும் அதன் உரிமையாளர் ரெங்கன் மகன் சின்னத்தம்பி என்பதும் தெரிந்துள்ளது. எந்த ஊரில் எக்ஸ்.எல்-ல மண் அள்ளுவாங்க என்று சிரித்துவிட்டனர் அந்த எண்ணை ஆய்வு செய்தவர்கள்.
இப்படித் தான் போலி எண்களை கொடுத்து புரோக்கர்கள் மூலம் அனுமதி பெற்று மண் அள்ளுகிறார்கள் இதற்கு அனுமதி அளிக்கும் மாவட்ட அதிகாரிகள் வாகன எண்களை ஆய்வு செய்த பிறகு அனுமதி கொடுத்திருந்தால் இது போன்ற முறைகேடுகள் நடக்காது. ஆனால் இது போலி எண்கள் தான் என்று தெரிந்தும் கூட அனுமதி அளிப்பது தான் வேதனையே.
இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் புகார் சென்ற பிறகு சம்மந்தப்பட்ட தினையாக்குடி ஏரியில் மண் எடுப்பதை கண்காணிக்க சென்ற அதிகாரிகள் 13 வாகனங்களை நிறுத்தியுள்ளனர். ஆனால் அத்தனை வாகனங்களும் பறிமுதலா என்பது கேள்விக்குறியாக உள்ளது.