கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. மாநிலச் செயலாளர் அஸ்வத்தமான். இவரது சகோதரியின் திருமண விழா நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அஸ்வத்தமான் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அன்பளிப்பாகப் பணம் மற்றும் நகைகளை வழங்கினர். மணமக்களுக்கு அன்பளிப்பாக கொடுத்த பணம் நகைகளை அஸ்வத்தமானின் தாயார் அருள்மொழி ஒரு பையில் வாங்கி வைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் முக்கிய உறவினர்கள் சிலர் வந்திருந்தனர். அப்போது அருள்மொழி பையை கீழே வைத்துவிட்டு உறவினர்களைக் கையெடுத்து கும்பிட்டு வரவேற்றார். சில நொடிகள் கழித்து மீண்டும் கீழே வைத்த அன்பளிப்பு பையை எடுப்பதற்கு குனிந்தபோது பை திடீரென்று காணாமல் போயிருந்தது. அந்தப் பையில் அன்பளிப்பாக அளித்த பணம் தங்க நகைகள் சுமார் 20 லட்சம் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த அருள்மொழி, உறவினர்களிடம் பை காணாமல் போனது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மண்டபத்தில் இருந்த இரு வீட்டு உறவினர்கள் நகை பணம் அடங்கிய பையை திருமண மண்டபம் முழுவதும் தேடினர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனடியாக இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அன்பளிப்பு நகை பணம் இருந்த பையை அஸ்வத்தமானின் தாயார் அருள்மொழி கீழே வைத்தபோது அருகில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும், அவனுடன் ஒரு நபரும் இருந்தனர். அவர்கள் இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பையை திருடிக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அந்த இருவரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், மணமக்களுக்கு உறவினர்களா இல்லையா, திருமணத்திற்கு வந்த கூட்டத்தை பயன்படுத்தி திருட வந்தவர்களா எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.