சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவருக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கரின் செயல்பாடு குறித்து கேட்டறியப்பட்டது. இன்று மதியத்திற்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற மருத்துவர் பாலாஜி, தனியறைக்கு மாற்றப்பட இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும், அந்த தனியறையில் இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்ற இளைஞரை, மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததை அனைவரும் அறிவீர்கள். அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர், ‘காவல் உதவி’ செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பொது மருத்துவப்பிரிவுக்கு வருவோருக்கு நீலநிற டேக் பொருத்தப்படும். நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்களின் கையில் டேக் கட்டும் நடைமுறை உள்ளது. டேக் கட்டும் நடைமுறை, படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்தார்.