தூத்துக்குடி மாவட்டத்தின் தட்டார்மடம் பகுதியின் சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த வாலிபர் செல்வன், சொத்துப் பிரச்சனை காரணமாக கடந்த 17 ஆம் தேதியன்று ஒரு கும்பலால் காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். அவரது உடலைக் கடக்குளம் காட்டில் வீசிச் சென்றது அந்தக் கும்பல்.
அது குறித்து அந்தப் பகுதியின் அ.தி.மு.க. மாவட்ட விவசாய அணிச் செயலாளரான திருமணவேல், தட்டர்மடம் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், முத்துராமலிங்கம், சின்னத்துரை, ராமன் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய அ.தி.மு.க. புள்ளி திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் இருவரையும் கைது செய்யவேண்டும் என போராட்டம் வலுத்ததால் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்தார் ஐ.ஜி பிரவீன்குமார் அபினபு. அடுத்து திருமணவேல், அவரது கூட்டாளி சுடலைக் கண்ணு இருவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு உள்ளது என்பதால், வழக்கை சி.பி.சி.ஐ.டி.யினர் விசாரிக்க உத்தரவிட்டார் டி.ஐ.ஜி.யான திரிபாதி. இதுபோன்ற நடவடிக்கைகளால் போராட்டத்தைக் கைவிட்டு பிரேதப் பரிசோதனை செய்த செல்வத்தின் உடலை அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் பெற்றனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனால், சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி அனில் குமாரிடம் வழக்கின் ஆவணங்களை இன்று முறைப்படி டி.எஸ்.பி பிரகாஷ், ஒப்படைக்கிறார்.