"கடந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்.? என எங்களிடம் அடிக்கடி கேள்வி கேட்டவர்கள், இப்போது பொதுத்துறை நிறுவனங்களை ஏலம்விட்டு நாங்கள் செய்த சேவைகளை விளம்பரப்படுத்திவருகின்றார் நரேந்திர மோடி. அதற்காகவே மோடிக்கு நன்றி." என பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரான ப. சிதம்பரம்.
விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று (10.09.2021) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, "எல்லா வகையிலும் மக்களுக்கு மகழ்சி தரும் வகையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு அமைச்சரவை தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்க உத்தரவிட்டதற்கு உளமார்ந்த நன்றி.! அதேபோன்று கண்டனூர் காதி கிராஃப்ட் மையம் மீண்டும் துவங்க ஏற்பாடு செய்துவரும் காதி அமைச்சருக்கும் நன்றி. அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தர் நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை மொத்த வியாபாரம் செய்யப் போகிறார் நரேந்திர மோடி. 70 ஆண்டு காங்கிரஸ் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். இப்போது அவரே பட்டியலும் போட்டுவிட்டார். 70 ஆண்டுகால ஆட்சியில் செய்திருப்பதை மொத்த விலைக்கு விற்கப் போகிறார்கள். எங்களுக்கு அது ஒரு நல்ல விளம்பரம். விளம்பரம் செய்த நரேந்திர மோடிக்கு நன்றி.!!" என்றார் அவர். பத்திரிகையாளர் சந்திப்பின்போது காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் மாங்குடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.ஆர். ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர் .