ஒரத்தநாட்டில் உள்ள பழமையான ’முத்தம்மாள் சத்திரம்’ பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை சத்திரங்களை அமைத்தனர். அச்சத்திரங்களில், காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டை சைதாம்பாள் சத்திரம், ஒரத்தநாடு முத்தமாள் சத்திரம், ராசகுமரபாயி சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குள சத்திரம், மீமிசல் ராசகுமராம்பாள் சத்திரம், மணமேல்குடி திரவுபதாம்பாள்புரம் சத்திரம், ராமேசுவரம் சத்திரம், சேதுக்கரை சத்திரம் என 20 சத்திரங்கள் முக்கியமானவை ஆகும்.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ‘முத்தம்மாள் சத்திரம்’, 1800ல் முத்தம்மாள் என்பவரின் நினைவாக சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது. காசியிலிருந்து ராமேஸ்வரம் செல்வோர்களுக்கு இது ஒரு காலத்தில் சத்திரமாக இருந்துள்ளது. தற்காலத்தில் பள்ளிக்கூடமாகவும், மாணவர்கள் விடுதியாகவும் இது மாறியது. தற்போது சேதமடைந்து போய்விட்டதால், பழமையான இந்த சத்திரத்தை பாதுகாக்க வேண்டும் வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு தொல்லியல் துறை செவிசாய்த்துள்ளது.
விரைவில் இது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, இங்கு அருங்காசியகம் அமைக்கப் படவிருக்கிறது.