பிப்ரவரி 5- ஆம் தேதி காலை தமிழ் பேரரசன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நடக்க உள்ளது. அதற்கான அத்தனை பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மற்ற கோயில்களுக்கு கூட முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் வர வேண்டும் என்று முன்னால் வருவது போல ஏனோ தஞ்சை பெருவுடையார் குடமுழுக்கை காண ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தமிழகம் கடந்தும் பல ஆயிரம் பேர் வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் குடமுழுக்கை காண வந்த வண்ணம் உள்ளனர்.
வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் தவித்து திருச்சி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை என பல நகரங்களிலும் தங்கி வருகின்றனர். இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்தி தஞ்சை நகரில் விடுதிகள் மூன்று மடங்கு வரை கட்டணங்களை உயர்த்திக் கொண்டனர்.
அதை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஓதுவார்களின் தமிழை கேட்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான் பெருவுடையார் கோயில் பாதுகாப்பு கருதி காவல் துறை தலைவர் கோயிலுக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து கோயில் போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. பலத்த சோதனைகள், பாஸ் வைத்திருப்பவர்கள் பாஸ் காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
யாகசாலை பூஜையில் கலந்து கொள்ள வந்த 30- க்கும் மேற்பட்ட குருக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். காரணம் அவர்களிடம் பாஸ் இல்லை. யாகசாலைக்கு போகனும் என்று அவர்கள் கேட்டாலும் முறையான அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கறாராக இருந்தனர் போலீசார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் வரை பேசி பாஸ் இல்லாத குருக்கல்கள் அனுமதிக்கப்பட்டனர். குடமுழுக்கையொட்டி சுமார் 5000 போலீசார் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (03/02/2020) வரை நகரில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வந்தாலும் இன்று (04/02/2020) மதியத்திற்கு பிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடமுழுக்கை காண வரும் பக்தர்களுக்காக ஆங்காங்கே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் 60 பேர் தஞ்சை பழைய பேருந்து நிலையம் முதல் ராஜா மிராசுதார் மருத்துவமனை வரை உள்ள சுற்றுச்சுவர்கள் முழுவதில் பிரதிபலிக்கும் வண்ண ஓவியங்களை வரைந்தனர். இதைப் பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.