சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் வி.எச்.பி. ரதயாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் மத அடிப்படை வாதிகளின் கொடூர கரங்கள் நுழைவதை தமிழ்ச் சமுதாயம் அனுமதிக்காத நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு 'ராமராஜ்ஜிய ரத யாத்திரை' என்ற பெயரில் தமிழகத்தில் பதட்டத்தைத் தூண்டி விட முயல்கிறது.
எதிர்வரும் மார்ச் 20 அன்று, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் புளியரையில் நுழையவிருக்கும் இந்த யாத்திரையால், அண்ணன்-தம்பிகளாய் வாழும் தமிழ்ச் சமுதாயத்தில் தேவையற்ற சமூக பதட்டம் உருவாகும் அபாயமிருக்கிறது. கடந்த காலத்தில் இது போன்ற ரதயாத்திரைகளால் வட இந்தியாவில் கலவரங்கள் நடைபெற்றதை நாட்டுமக்கள் மறக்கவில்லை.
இந்நிலையில் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் என பூத்துக்குலுங்கும் தமிழ் நிலத்தில், மதவெறியின் நச்சுப்பாம்புகள் நடமாட அனுமதிக்க கூடாது என்பதே பெரும்பான்மையான தமிழர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் எடப்பாடியார் , மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அரசுக்கு களங்கம் ஏற்படாத வகையில், இந்த ரதயாத்திரையை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.