"இந்த சட்டசபை காலம் முடிகிற வரைக்கும் உள்ளாட்சி தேர்தல் வேண்டாமுங்க" என ஈரோட்டில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் தலைவரான உ. தனியரசு எம்.எல்.ஏ.கூறினார்.
இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும்.கூறியதாவது:-
"தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பலமுறை நடத்த அரசு ஏற்பாடு செய்தும் நடைபெறவில்லை. இப்போதும் கூட இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமாகத் தான் உள்ளது அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து கலந்தாலோசித்து இந்த உள்ளாட்சித் தேர்தலை வருகிற 2021ஆம் ஆண்டு வரை ஒத்தி வைப்பது தான் நல்லது. இது எனது கருத்து . நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இருவரும் இத்தனை ஆண்டுகளாக எந்த ஒரு கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக கூட சேராமல், மக்களுக்காக எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல், திடீரென அரசியலில் நுழைந்து அரியணையில் ஏற நினைப்பது மிகப் பெரிய தவறு. அவர்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம் தமிழக மக்கள் இனி எந்தவொரு நடிகர், நடிகைகளையும் அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நடிகர்களான அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது." என கூறினார்.