வருகிற 19 ம்தேதி திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக ஆளும் கட்சியும் எதிர் கட்சியினரும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் பவனி வருகிறார்கள். இருந்தாலும் அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என மூன்று கட்சிகளுக்கும் இடையே தான் போட்டி வலுத்து வருகிறது.
அதுபோல் ஆளும் கட்சி தொகுதிகளை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.கள்.மாவட்ட செயலாளர்கள் கட்சி பொறுப்பாளர்கள் எனபெரும் திரளாகவே தொகுதிகளில் முகாம் போட்டு அதிகாரம், பணபலம் மூலம் வாக்காள மக்களிடம் வாக்குகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச்செயலாளரான தங்க தமிழ் செல்வன் மதுரையில் உள்ள மெசிரா காலேஜ் ரோட்டில் உள்ள தேவி லாட்ஜ்சில் ரூம் போட்டு திருப்பரங்குன்றத்தின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் ஆணையத்தில் உள்ள பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் திடீரென தங்க தமிழ் செல்வன் தங்கியுள்ள லாட்ஜ்க்கு விசிட் அடித்து அதிரடி சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக தங்க தமிழ் செல்வனிடம் கேட்ட போது.... ஆளும் கட்சி தோல்வி பயத்தால் வாக்காள மக்களுக்கு தலைக்கு 6 ஆயிரம் கொடுத்து ஓட்டுகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.கள் வரை தங்கள் கார்களில் லட்சக்கணக்கில் பணங்களை வெளிப்படையாகவே வைத்து கொண்டு தொகுதியில் வளம் வருகிறார்கள். அதை பிடிக்க தேர்தல் ஆணையத்திற்கு துப்பு இல்லாமல் தேர்தல் ஆணையமே ஆளும் கட்சிக்கு துணை போய் வருகிறார்கள்.
அப்படி இருக்கும் போது என் அனுமதி இல்லாலாமல் நானே தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த நேரத்தில் நான் தங்கியுள்ள லாட்ஜ்க்கு தேர்தல் பறக்கும் படை போய் அங்குள்ள லாட்ஜ் மேனேஜரை மிரட்டி, ஸ்பேர் சாவியை வாங்கி சோதனை செய்ததில் அந்த ரூமில் ஒன்றும் இல்லை என்று கூறி சென்று விட்டனர். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேர்தல் அதிகாரிகளின் துணையோடு ஆளும் கட்சி என் ரூமில் வைக்க கூட முயற்சி செய்வார்கள். அதனால என் அனுமதி இல்லாமல் இனி தேர்தல் அதிகாரிகள் என் அறையை சோதனை செய்ய கூடாது என்று கூறினார்.