காட்டுமன்னார்கோயில் வட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் பொருட்கள் சரியான முறையில் வழங்குவதில்லை, மண்ணெண்ணெய் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை போடுகின்றனர். இந்த கடையில் பருப்பு என்பதை பார்த்ததே கிடையாது. கோதுமை போடுவதே இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று சம்பந்தபட்ட கிராம பொதுமக்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் பொருட்களில் பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறார்கள். வட்ட வழங்கல் துறையில் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கூட்டுக் கொள்ளை அரங்கேறி வருகிறது. இதனை அரசு தடுக்க முன்வராவிட்டால் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.