Skip to main content

போலீஸ் இன்பார்மராக செயல்பட்ட த.மா.கா. நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை! ஒகேனக்கல்லில் பயங்கரம்!!

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

ஒகேனக்கல்லில் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டு வந்த, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியை மர்ம நபர்கள் ஓட ஓட துரத்திச்சென்று வெட்டி படுகொலை செய்தனர்.


தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை நாடார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (52). இவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பென்னாகரம் வட்டாரத் தலைவராக இருந்து வந்தார். போலீசாருக்கு அடிக்கடி துப்பு கொடுக்கும் இன்பார்மராகவும் செயல்பட்டு  வந்தார்.

 

murder


இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், ரமேஷ்  என்ற மகனும் உள்ளனர். சொந்தமாக மீன் பண்ணையும் வைத்திருந்தார். இருசக்கர வாகனத்தில் சென்று பால் வியாபாரமும் செய்து வந்தார்.


இன்று (நவம்பர் 29, 2018) காலை 6.15 மணியளவில், பால் கேனை எடுத்துக்கொண்டு ஒகேனக்கல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் உள்ள முதலைப்பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அரிவாள்களுடன் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரை வழிமறித்தனர்.

 


அதிர்ச்சி அடைந்த கணேஷ், தனது வாகனத்தை  அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். அவரை விடாமல் துரத்திச்சென்ற மர்ம நபர்கள், கணேஷின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தாங்கள் வந்த வழியிலேயே மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

 


இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் டிஎஸ்பி ராஜ்குமார், ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


உடற்கூறாய்வில் கணேஷூக்கு தலை, தோள்பட்டை என ஆகிய இடங்களில் ஆறு வெட்டுக்களும், வலது உள்ளங்கை பகுதியில் ஒரு வெட்டும் விழுந்திருப்பது தெரிய வந்தது. உடற்கூறாய்வு முடிந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

murder

 

கொலையுண்ட நபர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பென்னாகரம், தர்மபுரி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.


இது ஒருபுறம் இருக்க, கொலைக்கான காரணமாக சில தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.


ஒகேனக்கல், பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம் ஆகிய காவிரி கரையோரங்களில் மணல் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் ஆள்கள் நடமாட்டம் இருக்காது.


இதைப்பயன்படுத்திக் கொள்ளும் சுற்றுவட்டார மக்கள் சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் மூட்டைகளிலும், கழுதைகளில் பொதி மூட்டைகளாகவும் மணல் கடத்தி ஓரிடத்தில் சேகரிக்கும் கும்பல், அங்கிருந்து டிராக்டர், லாரிகளில் மணலை கடத்திச் செல்கின்றனர். 


கொலை செய்யப்பட்ட கணேஷ்¢, மணல் கடத்தும் கும்பல் குறித்து அடிக்கடி போலீசாருக்கு ரகசியமாக உளவு சொல்லி வந்துள்ளார். ஒருமுறை கணேஷின் மச்சான் உறவுமுறை கொண்ட ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டது குறித்து கணேஷ் அளித்த தகவலின்பேரில் போலீசார் அந்த நபரின் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

 


அதிலிருந்தே கணேஷூக்கும் அவருடைய உறவினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாகவே அந்த நபர் கணேஷிடம், அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 


கொலை நடந்த பிறகு, அந்த நபரும் வீட்டில் இருந்து தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. கணேஷை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள் கூலிப்படை கும்பலா? அல்லது உள்ளூர் ரவுடிகளா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்