வேலூரில் சர்க்கரை ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் எரிந்து நாசமாகியது.
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்துள்ள அம்முண்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது வேலூர் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த சர்க்கரை ஆலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய கரும்புகள் தரம் பிரிக்கப்பட்டு சர்க்கரை, வெல்லம் மற்றும் இதன் மூலம் கிடைக்கும் நீராவி மூலமாகத் தினம் 15 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ஆலை பராமரிப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கரும்பு சக்கைகள் செல்லக்கூடிய கன்வேயர் பெல்ட் அருகே வெல்டிங் பணிகள் நடைபெற்ற போது தீப்பொறி பரவியதால் அந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்து திருவலம் மற்றும் காட்பாடி, வேலூர் எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தீயானது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் கரும் புகை சூழ்ந்து வருவது அக்கம் பக்கத்தில் உள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.