சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் அதிவிரைவு ரயில் சிதம்பரத்தை நோக்கி இன்று (21-05-24) 11 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் மாற்றுத்திறனாளி அமரும் தனி ரயில் பெட்டியும் உள்ளது. அந்தப் பெட்டியில் சக பயணிகள் ஏறிக்கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி பயணிகள் திடீரென ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினார்கள். அதனால், சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள கதிர்வேல் நகர் ரயில்வே கேட்டு அருகே ரயில் நின்றது. இதனால் சக பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேலாக அந்த ரயில் அங்கேயே நின்று கொண்டிருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த ரயில்வே ஓட்டுநர் மற்றும் ரயில்வே கார்ட் இருவரும், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெட்டிக்கு வந்து சங்கிலி இழுத்ததை சரி செய்தனர். இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்ற அந்த ரயிலில் மாற்றுத்திறனாளி பெட்டியில் இருந்த சக பயணிகளை சிதம்பரம் இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் மாற்றுத்திறனாளி பெட்டியில் இருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.