கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக விருத்தாசலம் அடுத்த வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. ஏக்கருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு, நிரந்தர வேலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் நிலங்கள் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி இன்று 500க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், ராட்சத மண் அள்ளும் இயந்திரங்களுடன் கிராமங்களுக்குச் சென்ற என்.எல்.சி அதிகாரிகள், வளையமாதேவியில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்கதிர்களை அழித்து, வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் போலீசாரால் தடுக்கப்பட்டனர். மேலும் கிராமங்களுக்குச் செல்ல முயன்ற பா.ம.க தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ் தலைமையிலான பா.ம.கவினர் சேத்தியாத்தோப்பில் தடுக்கப்பட்டதால் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பா.ம.கவினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கைவிட வலியுறுத்தியும் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பா.ம.க மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பா.ம.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறுகையில், “இந்த நிலங்களுக்கு என்.எல்.சி நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டது. அந்த நிலம் விவசாயிகளிடமே இருந்ததுதான் தற்போதைய பிரச்சினைக்குக் காரணம். என்.எல்.சி நிறுவனம் தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 800 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் குறையும் என என்.எல்.சி தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதமே விவசாயிகளிடம் விளைநிலங்களைப் பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதையும் மீறி விவசாயிகள் தற்போது நெல் பயிரிட்டு உள்ளனர். இருந்தாலும் இதையும் ஏற்றுக்கொண்டு பயிரிடப்பட்டுள்ள விளை பயிர்களுக்கும் இழப்பீடு கொடுப்பதற்குத் தற்பொழுது என்.எல்.சி நிர்வாகம் முன்வந்துள்ளது. தற்போது 30 எக்டேர் நிலம் உடனடியாகத் தேவைப்படுகிறது. அதில் தான் தற்பொழுது கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 74 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதி உயர் இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.