"நாளைக்கு கல்யாணம்.. இன்னைக்குக் கூட பார்ட்டி வைக்கலைன்னா எப்படி..? அதனால் தான் கொன்றேன்." என நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளையை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு காவல்துறையிடம் அப்பாவியாய் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான் இறந்த மாப்பிள்ளையின் சகோதரி கணவன்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல்துறை துணைச்சரகத்தினை சேர்ந்த தென்மலை இந்திரா நகர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முனியப்பன். ஜேசிபி ஆபரேட்டரான இவருக்கும் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் குன்னூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் 06-03-2020 அன்று திருமணம் என நிச்சயிக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை முனியப்பன், அவரது அம்மா பஞ்சவர்ணம் மற்றும் அவரது தங்கை முனீஸ்வரி ஆகிய மூன்று பேரும் வீட்டின் கதவைத் திறந்து வைத்து ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
நள்ளிரவு 02:30 மணியளவில் அலறல் சப்தம் கேட்டு அனைவரும் எழுந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருமண மாப்பிள்ளை முனியப்பனை காய்கறி வெட்டும் கத்தியால் இடது பக்க கழுத்தை அறுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகக் கூறப்படுகின்றது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தினை ஆராய்ந்து, உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே வேளையில் சந்தேகத்திற்கிடமாக கொலையுண்ட முனியப்பனின் தங்கை கணவர் வேல்முருகனை சிவகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், "கொலையுண்ட முனியப்பன் தங்கை மாப்பிள்ளையான என்னை மதிப்பதுமில்லை.! திருமண பார்ட்டியும் வைக்கவில்லை. ஆதலால் ரூ.50 க்கு காய்கறி வெட்டும் கத்தியை விலைக்கு வாங்கி வந்து அனைவரும் தூங்குகையில், சந்தர்ப்பம் பார்த்து கழுத்தை அறுத்துக் கொன்றேன்." என வேல்முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகின்றது. காவல்துறையினரின் தொடர் விசாரணையில், "அவனை அறுக்கும் போது வருகின்ற ரத்தத்தை பார்க்கையில் பயம் வந்துடுச்சு.. அதனால் அவனை மடியில் போட்டு அழுதேன்." என்றும் கூறியிருக்கின்றார் கொலையாளி வேல்முருகன். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.