Skip to main content

'எங்களை ஏன் புரிஞ்சிக்கறதில்லை' - கண்காணிப்பு பணியில் உள்ள காவலர்கள் கவலை!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

கரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்தியரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் பெற தவிர மற்ற எந்த பணிக்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, கடைகள் திறக்ககூடாது என்பதற்காக மாவட்டம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

 Corona virus issue - police Worried

 



நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும், தேசிய மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில், கிராமப்புற கூட்டு சாலைகளில், முக்கிய பகுதிகளில் என காவல்துறை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அப்படி கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுக்கொண்டு இருக்கும் காவலர்களுக்கு தேவையான உணவு, குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

இதுப்பற்றி கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல்துறை கீழ்மட்ட காவலர்கள் சிலர் நம்மிடம் பேசியபோது, "சுட்டெரிக்கும் வெய்யிலில் உட்கார சேர் கூட இல்லாம நின்னுக்கிட்டு இருக்கறது கூட கஷ்டமாயில்லை சார். ஆனா, தடுப்பு போட்டு போலீஸார் நிக்கறாங்களே அப்படிங்கற பயமே இல்லாம சும்மாவே இந்த பசங்க வந்து ஆர்ன் அடிச்சி திறக்கச்சொல்றாங்க. ஒருத்தன் இரண்டு பேர்ன்னா திறக்கலாம், மணிக்கு 20, 30 பேர் வர்றான். இப்படி வெளியில சுத்தக்கூடாதுன்னு சொன்னாலும் புரிஞ்சக்கறதேயில்லை.

 

Corona virus issue - police Worried

 



அத்தியாவசிய பொருட்களை வாங்க போறவங்களை விட்டுடறோம். சும்மாவே சுத்தறதுக்காக வர்றவனை பார்க்கும்போது தான் கோபம் வருது. அரசாங்கம் நோய் பரவுது, வெளியே வராதிங்க காட்டு கத்தல கத்துது. அந்த பசங்களோட பெற்றோர்களுக்கு அது புரியுதா, புரியலையான்னே தெரியல. பையன் வீட்லயிருந்து வண்டி எடுக்கும்போதே எங்கடா போறான்னு கேட்டு தடுக்கறது கூடயில்லை. மாஸ்க் போடாமலே சுத்தறானுங்க. எங்க போறிங்கன்னு கேட்டால் கிட்ட வந்து தான் சட்டம் பேசறானுங்க. அப்படி பேசறவனுங்க பாதிப்பேருக்கு மேல போதை. வெளியில சுத்தறவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுத்தா பாதிப்பேர் இன்னேரம் உள்ளேயிருந்துயிருப்பாங்க. முதல் நாளே வாகனங்கள் பறிமுதல், பின்பக்கம் அடின்னு போட்டும் இந்த பசங்க திருந்த மாட்டேன்கிறாங்க.   

நாங்க என்ன எங்களுக்காகவ இங்க டூட்டி பார்க்கறோம். காலையில் இருந்து சாயந்தரம் வரை, சாயந்திரம் முதல் இரவு வரைன்னு இரண்டு ஷிப்ட் டூட்டி பார்க்கறோம். இதே சாப்பிடறோமே இந்த மதிய சாப்பாட்டை கூட உட்கார்ந்து ஒருயிடத்தில் நிம்மதியா சாப்பிட முடியறதில்லை. நின்னுக்கிட்டே சாப்பிட்டுட்டு அப்படியே ஓடிப்போய் நின்னு டூட்டி பார்க்கறோம். தாகத்துக்கு தண்ணீர் இருக்கறதில்லை. அக்கம் பக்கம் வீடுகள்ள வாங்கி குடிக்கறோம். பசிக்கு டீ குடிக்கலாம்னா கூட கடை இல்லை.

ஷிப்ட் முடிஞ்சி நேராப்போய் அப்படியே வீட்டுக்குள்ள போக முடியவில்லை. எங்களுக்கும் குடும்பம்மிருக்கு துணியெல்லாம் வெளியிலயே கழட்டி போட்டுட்டு குளிச்சிட்டு போறோம். குழந்தைகளை தொட்டா அவுங்களுக்கு தொத்திக்குமோ அப்படின்னு பயமாயிருக்கு. நாங்க செத்தா இந்த அரசாங்கம் நஷ்டயீடு தரும், இதே எங்க குடும்பத்துக்கு ஏதாவது ஒன்னு ஆனா ஒன்னும் கிடையாது. அதுக்காக பயந்துக்கிட்டு லீவு போட்டுட்டு வீட்லயா இருக்கோம், பாதுகாப்பு பணிக்கு போகமாட்டோன்னு சொல்றோமா, திரும்ப வந்துதான் வேலை செய்யறோம்.  

இந்த மக்கள் ஏன் அரசாங்கம் சொல்றதையும் புரிஞ்சிக்கறதில்லை, தெருவுல நின்னு அவுங்களுக்காக வேலை செய்யற எங்களையும் புரிஞ்சிக்கமாட்டேன்கிறாங்க" என வேதனையோடு பேசினார்கள்.

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

 தலை துண்டிக்கப்பட்ட இளைஞர்; காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Youth incident in Madurai over love issue

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அழகேந்திரன். பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர் கள்ளிக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் அழகேந்திரன் மதுரை மாவட்டம் வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே தலை தனியாகத் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அழகேந்திரனின் உடலைக் கைபற்றி பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அழகேந்திரன் மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். அது அந்தப் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவருக்குத் தெரியவர உடனே அழகேந்திரனை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனால், அழகேந்திரன் காதலைத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று தனியாகப் பேச வேண்டும் என்று கூறி அழகேந்திரனை, பிரபாகரன் அழைத்துச் சென்றுள்ளார். 

பின்னர் காதல் விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர். அப்போது தகராறு முற்றியதன் காரணமாக ஆத்திரமடைந்த பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து அழகேந்திரனின் தலையைத் துண்டித்துள்ளார். பின்னர் உடலையும், தலையையும் அங்கேயே போட்டுவிட்டு பிரபாகரன் தப்பித்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே அழகேந்திரனை ஆணவ படுகொலை செய்துவிட்டதாக  அவரது பெற்றோர் மற்றும் உறவினர், தமிழ் புலிகள் அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிரபாகரனை  கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

உலக போதை ஒழிப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
World Anti-Drug Day; Students awareness rally!

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை ரெயில்வே எஸ்.பி தொடங்கி வைத்தார்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் ரயில் நிலைய நடை மேடைகள் மற்றும் வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர். இதில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமைத் தாங்கினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், சப் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா, லட்சமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், பாலமுருகன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறுகையில் “போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி திருச்சி ரெயில் நிலையம் மட்டும் இன்றி திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 24 மாவட்டங்களிலும் நடைபெற்றது. போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் 3 ரெயில்வே உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.