தர்மபுரி அருகே, பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், லாரி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், ஏரியூரைச் சேர்ந்தவர் அருள்செல்வன் (34). லாரி ஓட்டுநரான இவர், கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி படித்து வந்த ஒரு மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏரியூர் காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருள்செல்வனை கைது செய்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை தர்மபுரி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் ஜன. 9ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அருள்செல்வன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சையத் பக்ரதுல்லா தீர்ப்பு அளித்தார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கல்பனா ஆஜராகி வாதாடினார்.