Skip to main content

பத்து தலித்துகள் படுகொலை -உத்திரபிரதேச, மத்தியபிரதேச அரசுகளை பதவி நீக்கம் செய்க! திருமாவளவன் வலியுறுத்தல்

Published on 03/04/2018 | Edited on 03/04/2018
ti

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை:

''வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முடக்கும் விதமாக உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு மிகப்பெரிய எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தலித் மக்கள் அநீதியான அந்த தீர்ப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தின் போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கும் தாக்குதல்களுக்கும் தலித்துகள் பத்து பேர் பலியாகியுள்ளனர்.

 

உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் தான் துப்பாக்கிச் சூடு அதிகம் நடத்தப்பட்டிருக்கிறது. சாதி வெறியோடு படுகொலையில் ஈடுபட்ட அந்த இரண்டு மாநில அரசுகளையும் கலைக்க வேண்டுமென குடியரசுத் தலைவரை வலியுறுத்துகிறோம்.

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மோடி அரசு சீராய்வு மனுவைத்தாக்கல் செய்திருக்கிறது. அது ஒரு கண் துடைப்பு நாடகம் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. தலித்துகளை ஏமாற்றும் மோசடியில் ஈடுபட வேண்டாமென மோடி அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எச்சரிக்கிறோம்.

 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்கும் விதத்தில் தீர்ப்பளித்த அதே நீதிபதிகளின் முன்னால் சீராய்வு மனு தாக்கல் செய்வது எந்த பலனையும் அளிக்காது. எனவே, உச்சநீதிமன்றத்தின் முழுமையான அமர்வுக்கு முன்னால் மேல்முறையீடு செய்ய வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு தடையாணைபெற வேண்டும் என தலித் இயக்கங்கள் வலியுறுத்தின. ஆனால் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு தலித்துகளின் போராட்டங்களை திசை திருப்பும் விதமாக சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அதை விசாரித்த அதே நீதிபதிகள் தங்களது தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். இது எல்லாமே பாஜக அரசும் நீதிபதிகளும் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு செயல்படுகிறார்களோ என்ற அய்யத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

 

துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளுக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் அதை சேர்க்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.’’
 

சார்ந்த செய்திகள்