தர்மபுரியில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு நடந்துள்ள திருட்டு சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை நேரத்தில் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது கரும்பு தோட்டத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு சிதறி கிடந்ததை பார்த்து கிராம மக்களிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த கிராம மக்கள் கோவிலுக்கு சென்று பார்க்கும் போது இரும்பு கேட்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டு மற்றும் நுழைவுவாயில் கதவில் போடப்பட்ட பூட்டு அறுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கோவில் திருட்டு சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அங்கு வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது கிராம மக்கள் தெரிவிக்கும்போது, கோவில் உண்டியலில் இருந்த சுமார் ரூபாய் 80,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளதாக தகவல் அளித்தனர்.
தடயவியல் துறையினர் பரிசோதனை செய்யும் வரை கிராம மக்கள் யாரும் உள்ளே நுழைய வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்ததால் கிராம மக்கள் யாரும் கோவிலின் உள்ளே செல்லவில்லை. இதனால் லாக்கரில் வைக்கப்பட்ட 20 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் என்னவாயிற்று என கிராம மக்கள் குழப்பத்தில் உள்ளனர். தடயவியல் துறை வரவழைக்கப்பட்ட பின்பு உள்ளே என்னென்ன சேதம் ஏற்பட்டுள்ளது எனவும், காணாமல் போன பொருட்கள் குறித்து விவரங்கள் தெரியவரும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 24 இலட்சம் இருக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.