தமிழகத்தில் கோயில் பிரசாதங்களை தபால் துறை மூலம் பக்தர்களுக்கு அனுப்பப்படும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. கோயில்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருக்கோயில்களின் பிரசாதங்கள் பக்தர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையானது தபால் துறையுடன் இணைந்து, கோயில்களின் பிரசாதங்களை பக்தர்களுக்கு அனுப்பும் திட்டத்தை இன்று முதல் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக 48 முதல்நிலை திருக்கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பப்படும் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. மேலும் கோயில்கள் குறித்த தகவல்களை பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்திற்கு திருக்கோயில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகத்தில் துவங்கி வைத்தார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் போன்ற 48 கோயில்கள் இத்திட்டத்தில் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் விருப்பப்படி அர்ச்சனை செய்து பிரசாதங்களை அவரவர் இல்லங்களுக்கே அனுப்பி வைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை தபால் துறையுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தாங்கள் விரும்பும் நபர்களுக்கும் பிரசாதங்களை அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. இரண்டாவது திட்டமாக திருக்கோயில்கள் எனும் செயலி அறிமுகத் திட்டம். இத்திட்டத்தின் கோயில்களின் வரலாறு, தகவல்கள், கோயில்களில் இருக்கும் வசதிகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியில் கோயிலில் செய்யப்படும் பூஜைகள், நடை திறந்து இருக்கும் நேரம், கட்டண விவரங்கள், முக்கிய விவரங்கள், மெய் நிகர் காணொளி, கோவில்களைச் சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி போன்ற வசதிகள் அனைத்தும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் கோயில் பணிகளுக்கான நன்கொடைகள், அன்னதானம் போன்றவற்றிற்கான நன்கொடைகள் வழங்கும் வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.