முதலமைச்சர் கருத்தை திரித்து கூறுவது, அதானி மீதான குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கும் முயற்சிஎன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் கருத்தை திரித்து கூறுவது, அதானி மீதான குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கும் முயற்சி. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், தொழில் அதிபருமான அதானி மீதும் அவரது குழும நிறுவனங்களின் அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசின் நீதித்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதானி குழும நிறுவனம் தயாரிக்கும் சூரிய சக்தி மின்சாரத்தை அதிக விலையில் கொள்முதல் செய்ய மாநில அரசு அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 29 கோடி வரை அதானி நிறுவனம் கையூட்டு கொடுத்திருப்பதாக கூறியுள்ள குற்றச்சாட்டில், ஒடிஷா, ஜம்மு காஷ்மீர், ஆந்திரா என்ற வரிசையில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தி வெளியானதும் அடுத்த வினாடியே தமிழ்நாடு அரசின் மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி “அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எந்தவித ஒப்பந்தமும் செய்ய வில்லை” என்பதை அறிக்கை மூலம் தெளிவு படுத்தியுள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதானி நிறுவனம் தொடர்பாக வினா எழுப்பப்பட்டது. இதற்கு முதலமைச்சர் “அது பற்றி ஏற்கனவே துறையின் சார்பாக அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்தியுள்ளார்” என்று பொறுப்பாக பதில் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனத் தலைவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி, முதலமைச்சரை ஆத்திரமூட்டும் நோக்கில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் “அவர் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி அதற்கெல்லாம் பதில் இல்லை” என்று கூறியுள்ளார். இந்த கேள்வி - பதில் நிகழ்வை பயன்படுத்தி பாமக, பாஜக அதன் பரிவாரங்கள் ஒரே குரலில் முழங்கி, அதானி மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில், வெளியுறவு அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஒன்றிய அரசு மத்திய புலனாய்வுத்துறை விசாரணக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்கவும் முன் வரவில்லை. மாநில அரசை புறந்தள்ளி அதிகார வர்க்கத்துடன் தொடர்பு கொண்டுள்ள குழும நிறுவனங்களின் மோசடி குறித்தும் பேசவில்லை. இவைகள் அனைத்தையும் மக்கள் கவனத்துக்கு வராமல் தடுக்க பாஜகவும், பாமகவும் படாத பாடு படுகிறது. முதலமைச்சரை மையப்படுத்தி லாவணி நடத்தி வரும் பாமக, பாஜக பரிவாரங்களின் நோக்கம் ஒரு போதும் நிறைவேறாது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.