ஈரோடு நொச்சிக்காட்டு வலசு வெள்ளப்பாறை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான முனியப்பசுவாமி கோவில் உள்ளது. அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில் இது.
இந்த கோவிலின் பூசாரி 20ஆம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவிலின் நடையை பூஜை செய்வதற்காக திறந்து உள்ளே சென்றார். அப்போது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 உண்டியலின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் இருந்த பல ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து கைவரிசையை காட்டியுள்ளார்கள். இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகை மற்றும் அவர்கள் விட்டுசென்ற தடயங்களை சேகரித்தனர்.
திருட்டு நடந்த கோவிலில் பொருத்தப்பட்டிருந்த 7 சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.