சைவம் பெரிதா வைணவம் பெரிதா என இரு தரப்பினருக்கும் பல நூறு ஆண்டுகளாகவே பிரச்சனை இருந்துவந்தது. பின்னர் யார் பெரியவர் என்ற ஈ.கோ காரணமாக சர்ச்சைகள் வெடித்தது. பின் இரு தரப்பினரிடையே மோதலாக உருவெடுத்தது. இரண்டு தரப்புகளும் மோதிக் கொண்டதில் ரத்தமும், சதையும் தெறித்தது. பச்சை மண்ணில் ரத்த ஆறு ஓடியது. அப்படிப்பட்டதொரு வன்முறை.

இவர்களின் மோதலை முடிவுக்குக் கொண்டுவர எண்ணிய கைலாய நாதரான சிவபெருமான் தன் உடம்பில் ஒரு பாதியை சிவனாகவும், மறு பாதியை விஷ்ணுவாகவும் ஒரு சேர உருவெடுத்துப் பக்தர்களுக்குக் காட்சியளித்தவர்.
சிவனும் விஷ்ணுவும் வெவ்வேறல்ல. அது போன்றே சைவமும், வைணவமும் தனித் தனியானவை அல்ல. அனைத்தும் ஒன்றே என்ற அருள்வாக்குடன் சர்வேஷ்வரன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதன் பிறகே ரத்தக் களறி ஓய்ந்தது. கல்ப கோடி காலத்திற்கு முன்பு சிவபெருமான் இது போன்று பக்தர்களுக்குக் காட்சியளித்த பூமிதான் நெல்லை மாவட்டத்தின் சங்கரநயினார் கோவில். இங்கே பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் சிவ பெருமான், சங்கரலிங்க சங்கரநாராயணர், ஸ்ரீ கோமதியம்பிகை என மூன்று தெய்வங்களுக்கான மூன்று மிகப் பெரிய சன்னிதானங்களைக் கொண்ட ஸ்ரீ சங்கரநயினார் ஆலயத்தை உருவாக்கியவர் மாமன்னன் உக்கிர பாண்டியன். மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்கும் ஆலயம்.
காலங்கள் கடந்தும் வரலாற்று சிறப்புடன் இருக்கும் அந்த ஆலயத்தின் மத்தியில் அமைந்திருக்கிற ஸ்ரீ சங்கர நாராயணர் சன்னதியின் தென் பக்கவாட்டுச் சுவரில் பண்டைகாலத் தமிழ் எழுத்தைக் கொண்ட கல்வெட்டு இருந்தது. இந்த ஏப்ரலில் சில நாட்களுக்கு முன்பு இந்தக் கல்வெட்டின் எழுத்துக்கள் சில குதறப்பட்டுப் பாதியாகக் காட்சியளித்ததைக் கண்டு அதிர்ந்து போன நகரின் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் குழு, அந்த எழுத்துக்களின் வரலாற்றைக் கண்டுபிடிப்பதற்காக கல்வெட்டின் படங்களை தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
முன்பு முழு எழுத்துக்களுடன் காணப்பட்ட கலவெட்டில் பாதி எழுத்துக்கள் கொத்திக் குதறப்பட்டது போன்று தெரிகிறது. அதன் அடையாளங்களையும், அது தொடர்பான காலங்களையும் அறிந்து கொள்ளவே ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும் ஆலயக் கல்வெட்டுச் சிதைப்பு, ஆதாரங்களை, வரலாற்றுகளை அழிக்கிற முயற்சியா என்கிற சந்தேகம் கிளம்பியிருக்கிறது என்கிறார் அந்தக் குழுவின் பொறுப்பாளர்கள்.