Skip to main content

"ஜெயமோகன் என்னை தகாத வார்த்தையில் திட்டினார்.." - கடைக்கார பெண்மணியின் வாக்குமூலம்!

Published on 15/06/2019 | Edited on 16/06/2019

சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்ட விவகாரம். இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலாவிக்கொண்டிருக்க, நாகர்கோயில் பார்வதிபுரத்தில்  ஜெயமோகனால் அவமானப்படுத்தப்பட்டதாக காவல்துறையில் வாக்குமூலம் கொடுத்த   கடைக்கார பெண்மணி கீதாவிடம் நான் பேசியபோது,

 

"காய்கறிகடை, மளிகைகடை, டீ கடை என மூணு கடைகள் வெச்சிருக்கோம்ங்க. நேற்று( 14 ந்தேதி) இரவு வந்தவரு(எழுத்தாளர் ஜெயமோகன்)  1/2 லிட்டர் பால், 2 மாவுப்பாக்கெட்டும் கேட்டாரு. 13 ந்தேதி மாவுதான் சார் இருக்கு. ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். சரி கொடுங்கன்னு வாங்கிட்டுப்போனாரு. திமுக வட்டசெயலாளரா இருக்கிற என் கணவர் செல்வம் பார்ட்டி ஆஃபிஸ் போயிட்டு வந்ததும் தண்ணீ கேட்டார். கொண்டு வந்ததும் குடிச்சுட்டு மளிகைக்கடையை திறந்து பொருட்கள் கொடுத்துக்கிட்டே கடைக்காரப் பையனுடன் கணக்குப் பார்த்துக்கிடிருந்தார். திடீர்ன்னு, மாவு பாக்கெட்டோடு  பைக்குல வந்தவர்( ஜெயமோகன்) ஏண்டி நாயே தே...மவளே... என்ன மாவடி கொடுத்திருக்கன்னு கேட்டுக்கிட்டே மாவு பாக்கெட்டை தூக்கி வீசினாரு. 

 

இந்தமாதிரி, நம்பள யாருமே பேசினதில்லையேன்னு எனக்கு ஒருமாதிரி கைக்கால் எல்லாம் நடுக்க ஆரம்பிச்சிடுச்சி. நான் சொல்றது பொய்யின்னா டீகடையில வேலைபார்க்கிற பையன் பக்கத்துல இருந்தான். அவனே, என்னக்கா இப்படில்லாம் பேசிட்டாரேன்னு சொன்னான்.

 

 

w

 

அவர், அப்படி பேசினதும் நான் நிலைகுலைஞ்சிபோயிட்டேன். கோபமாகி, 'நீதானே பார்த்து எடுத்துட்டுப்போன? இப்பவந்து இப்படி பேசுற?' ந்ன்னு கேட்டேன். உடனே, தண்ணீர் சொம்பை வேகமாக தள்ளிவிட்டுட்டு உள்ளவந்து என் முடியப்பிடிச்சு இழுக்க முயற்சி பண்ணினார். இதைப்பார்த்து டென்ஷனான என் கணவர் அவரை (ஜெயமோகன்) புடிச்சு நெட்டித்தள்ள கடையிலிருந்து வெளியில வந்து விழுந்துட்டாரு. என் கணவரை அடிச்சது உண்மைதான். அவரும் இவரை திருப்பி அடிச்சாரு. அவரோட, மனைவி எங்க கடையோட ரெகுலர் கஸ்டமர். ரொம்ப நல்லவங்கன்னு அவங்கக்கிட்டப் போயி நியாயத்தை சொல்லலாம்னு போனாரு. ஆனா, அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க. எனக்கு பி.பியே கிடையாது ஆனா பிரஷர் அதிமாகி மூச்சுதிணறல் ஏற்பட ஆரம்பிச்சிடுச்சு. ஏற்கனவே, ஹார்ட் பிராப்ளம் இருக்கிறதால எதுவும் ஆகிடக்கூடாதுன்னுதான் பயந்துபோய் ஆசாரிப்பள்ளம் ஜி.ஹெச்சுல அட்மிட் ஆனேன். பி.பி. 179 இருந்துச்சு. 

 

ஒருமணிநேரம் கழிச்சுப்பார்த்தா நான் அட்மிட் ஆகியிருக்குற அதே இடத்துல ரெண்டு மூணு பெட்டு தள்ளி அவரும் அட்மிட் ஆனாரு. எனக்கு ஒண்ணுமே புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது. நான், கொடுத்த வாக்குமூலத்தை எடுத்துக்காம அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி என் கணவரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. 

 

என் கணவர் குடிச்சிட்டு அடிச்சதா சொல்றாங்க. உண்மை என்னன்னா? அவரு குடிப்பாரு இல்லைன்னு சொல்லல. ஆனா, கடைக்கு வரும்போது சிகரெட், குடியை தொடவே மாட்டாரு. கடையை கோயில்மாதிரி நினைக்கிறவரு. கடை மூடினபிறகுதான் குடிப்பார். அந்தமாதிரிதான், பிரச்சனையெல்லாம் முடிஞ்சபிறகு வழக்கம்போல் குடிச்சிட்டார். ஆனா, அரெஸ்ட் பண்ணினதும் போதையில இருந்ததால ஜெயமோகனிடம் சண்டபோதும் குடிச்சிருந்தமாதிரி பரப்பிவிட்டுட்டாங்க. எனக்கு மூணு பெண் குழந்தைங்க சார். அந்தாளால எங்க மானமே போயிடுச்சு. முந்தினநாள் மாவு பிடிக்கல. காச கொடுன்னு கேட்ட்டிருந்தா கொடுத்திருப்பேன். இப்படி பேசலாமா? எனக்கு அவரை யார்ன்னுக்கூட தெரியாது. ஆனா, என் கணவருக்கு அவரைத் தெரியுமாம். தெரிஞ்சிருந்தும் அடிச்சார்ன்னா அதுக்குக்காரணம், ஒரு மனைவியை கண்ணு முன்னாடி அப்படி தரக்குறைவா பேசி அசிங்கப்படுத்தினா எந்தக்கணவன் தான் பார்த்துக்கிட்டு சும்மா நிற்கமுடியும்? நீங்களே சொல்லுங்க என்று குமுறிவெடிக்கிறார். இதுதொடர்பாக, ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதா திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

 

இதுகுறித்து, விளக்கம் கேட்க எழுத்தாளர் ஜெயமோகனை பலமுறை தொடர்புகொண்டபோதும் எஸ்.எம்.எஸ். அனுப்பியபோதும் லைனில் வரவில்லை. இச்செய்திக்குப்பிறகு அவர் விளக்கமளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது நக்கீரன் இணையதளம். 

 

சார்ந்த செய்திகள்