


திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து யானைப் பாகன் மற்றும் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்செந்தூரில் கோவில் யானையாக உள்ள தெய்வானை யானைக்கு பக்தர் சிசுபாலன் என்பவர் பழம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென யானை, யானைப் பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசி மிதித்தது. இதில் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவிலுக்கு வந்திருந்த சிசுபாலன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் பல முயற்சிகள் எடுத்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து கோவில் யானையை கோவில் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. சிசுபாலன், பாகன் உதயகுமாரின் உறவினர் என்பதும் கோவிலுக்கு வந்திருந்த நிலையில் யானைக்கு பழம் கொடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததும் தெரியவந்தது.
யானை கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. யானைப்பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலனை யானை மிதித்த நிலையில் அங்கிருந்த மற்றொரு யானை பாகன் மற்றும் ஊழியர்கள் யானையை கட்டுப்படுத்த முயன்று படுகாயமடைந்த இருவரையும் மீட்க முயலும் அந்த பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.