சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் மற்றும் நாகூர் தர்கா குளங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் கோயில் குளத்தின் சுற்றுச்சுவர், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. நான் சிதம்பரத்திற்கு ஆய்வு செய்ய சென்ற போது பொதுமக்கள் இச்சுற்றுச் சுவற்றினைச் சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் கோயில் குளத்தின் சுற்றுச்சுவர், ரூபாய் 2.62 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச் சுவர், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. நான் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய சென்ற போது இஸ்லாமிய பெருமக்கள் இத்தடுப்புச் சுவற்றினை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையினை ஏற்று, நாகூர் தர்கா குளத்தின் நான்கு புற தடுப்புச் சுவர் ரூபாய் 5.37 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும்.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.