அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சில அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 18-8-2020 ஆம் தேதி கலை 9 மணி அளவில் குழுமூர் நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செந்துறை ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது தொடர்பாக 15-8-2020 ஆம் தேதி காலை 12 மணி அளவில் வட்டாட்சியர் முத்துக் கிருஷ்ணன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி, குழுமூர் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி, ஒன்றியக் குழு உறுப்பினர் ம. ரெங்கநாதன், அரியலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு. உமாசங்கர் மகேஷ்வரன், கொள்முதல் அலுவலர் எஸ். வரதராஜன், செந்துறை காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன்,மாத்தூர் பகுதி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாளவந்தார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின்போது, விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொருட்டு கிடங்கு அமைக்க கோரியதற்கு மேற்கண்ட கிராம புல எண் 234/1 -1.48.5ஹெக்டேர் வண்டிப்பாதை புறம்போக்கில் தற்போது பயன் பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், வனத்துறை அலுவலர் குடியிருப்பு மற்றும் வங்காரம் சாலை ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை தவிர்த்து மீதமுள்ள நிலத்தினை அளவீடு செய்து சுமார் 1 ஏக்கர் இடத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்வதற்கான கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்படும் என வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் மேற்கண்ட இடத்தில் மூன்று மாத காலத்திற்குள் நெல் கொள்முதல் கிடங்கு மற்றும் களம் அமைத்து தரப்படும் என்று அரியலூர் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் டோக்கன் கொடுக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படாத நெல்லை வரும் திங்கள் முதல் முழுவதும் கொள்முதல் செய்துவிடுவதாக மேலாளரால் உருதியளிக்கப்பட்டது.
பருத்தி கொள்முதல் நிலையம் துவங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறையை கலந்து ஆலோசித்து அதற்கான இடத்தையும் ஒதுக்கி தருவதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார்.
மேற்கண்ட விவரங்களை தெரிவிக்கப்பட்டதன் பேரில் திமுக கட்சி சார்பில் 18-8-2020 அன்று நடத்தப்படுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
பேச்சுவார்த்தையில் திமுக மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் துரை. தேன்துளி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ஆ. தமிழ்மாறன், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் வீரா. இராசேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இர. ஆனந்த்ராஜ், குழுமூர் கழக முன்னோடிகள் மகாலிங்கம், செல்வராசு, இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.