Skip to main content

இளம்பெண் மரணம்:  போலீசில் புகாரளித்த தாய்!!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

Teen passed away: Mother files complaint with police

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது மதுரவல்லி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி சாந்தி தம்பதியருக்கு ராஜ்குமார், நித்தியா, சுமித்ரா, சண்முகம் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். அய்யாசாமி அயல் நாட்டில் பணி செய்து வருகிறார். மகன் ராஜ்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. மகள் சுமித்ராவை கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது மகன் ராஜா என்பவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து 4 மாதங்கள் கடந்தும் சுமித்ரா அவரது கணவர் ராஜா இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

 

கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்படும் சண்டை காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுமித்ரா தந்தை வீடான மதுரவல்லி கிராமத்தில் வந்து தங்கியுள்ளார். அவரது கணவர் ராஜா நேற்று முன்தினம் இரவு மனைவியை பார்ப்பதற்காக மதுரவல்லி கிராமத்திற்கு வந்து வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள சாந்தியின் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள சுமித்ராவின் தாய் சாந்தி அவரது சகோதரர் சரவணன் ஆகியோர் சென்று விட்டனர். சுமித்ரா அவரது கணவர் ராஜாவும் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் சுமித்ராவின் கணவர் ராஜா காலையில் சுமித்ராவின் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

 

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சுமித்ராவின் தாய் சாந்தி சகோதரர் சரவணன் இருவரும் அங்கிருந்தபடி சுமித்ராவுக்கு போன் செய்து மாப்பிள்ளை ராஜா வீட்டில் இருக்கிறாரா ஊருக்குச் சென்று விட்டாரா என்று விசாரிப்பதற்காக போன் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சுமித்ரா போனை எடுத்து பதில் கூறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சாந்தி அதே ஊரில் உள்ள உறவினருக்கு போன் செய்து சுமித்ராவுக்கு போன் செய்தோம்  சுமித்ரா போனை எடுத்து பேசவில்லை எனவே எங்கள் வீட்டிற்கு விரைவாக சென்று சுமித்ரா என்ன செய்கிறார் என்று பார்த்துவிட்டு எனக்கு உடனே போன் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

 

அதன்படி அவரது உறவினர் சுமித்ரா வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு சுமித்ரா தூக்கில் தொங்கியுள்ளார். இந்த தகவலை அவர் சாந்திக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் அங்கிருந்து பதட்டத்துடனும் அதிர்ச்சியுடனும் மதுரவல்லி வந்து சேர்ந்தனர். சுமித்ரா தாய் சகோதரர் மற்றும் ஊர் மக்கள் மிகவும் சோகத்தில் அழுதனர். இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது வரதட்சணை கேட்டு சுமித்ராவின் கணவர் ராஜா அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்தியதால் தான் மகள் சுமித்ரா தங்கள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

 

சுமித்ராவை பார்ப்பதற்காக வந்த அவரது கணவர் ராஜா நாங்கள் இல்லாத நேரத்தில் ஏதாவது சுமித்ராவை கொடுமைப்படுத்தி இருக்கலாம்? எனது மகள் சாவுக்கு அவர் காரணமாக இருக்கலாம்? எனவே மகள் சாவில் சந்தேகம் உள்ளது என்று வேப்பூர் காவல் நிலையத்தில் சுமித்ராவின் தாய் சாந்தி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி டிஎஸ்பி சிவா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மதுரவல்லி கிராம மக்களும் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்