அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சல் அடைந்த முதுகலை ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். லோகநாதன் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இங்கு, பாலக்கோட்டைச் சேர்ந்த கிருஷ்ணன்(53) என்பவர், வேளாண்மை பாடப்பிரிவு ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவர், மாணவர்களுக்குச் சரியாக பாடம் நடத்துவதில்லை என்று புகார்கள் வந்தன.
இந்நிலையில், நவ. 8ம் தேதி காலை, கிருஷ்ணன் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். இறை வழிபாட்டுக் கூட்டத்தில் வைத்து தலைமை ஆசிரியர் லோகநாதன் அவரைக் கண்டித்துள்ளார். மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் முன்பு தன்னை தலைமை ஆசிரியர் அவமானப்படுத்தி விட்டதாக வருந்திய கிருஷ்ணன், பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். இதைப் பார்த்து பதறிய சக ஆசிரியர்கள், அவரை உடனடியாக மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் காவல்நிலைய காவல்துறையினர், பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
வேளாண்மை பாட முதுகலை ஆசிரியர் கிருஷ்ணன் பாடம் நடத்துவது தொடர்பாக தலைமை ஆசிரியருக்கு அதிருப்தி இருந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதையடுத்து கிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தலைமை ஆசிரியர் கடிதம் எழுதியுள்ளார். அதன்பேரில் கிருஷ்ணனிடம் உயர் அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், காலை இறை வழிபாட்டுக் கூட்டத்திலேயே வைத்து தலைமை ஆசிரியர் அவரைக் கண்டித்ததால் மன உளைச்சல் அடைந்த கிருஷ்ணன், தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்தது. சிகிச்சையில் இருக்கும் ஆசிரியர் கிருஷ்ணனிடமும் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர், ''தலைமை ஆசிரியர் லோகநாதன் என்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார். சின்ன சின்ன விஷயங்களுக்காக எல்லாம் திட்டுகிறார். இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றேன்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, அந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் மற்ற ஆசிரியர்களிடமும், கிருஷ்ணனிடம் படித்து வரும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பலர் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், தர்மபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.