தமிழகத்தில் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவிகள் இன்று தேர்வு மையங்களுக்கு முன்பாக அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாகத் திருச்சி புனித சிலவை கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வினாத்தாள் திருத்துவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தேர்வு எழுத 6 மாத கால அவகாசம் வேண்டும். ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இதில் ஈடுபட்ட மாணவிகள், ‘கரோனா கால ஊரடங்கில் இணையதளம் மூலம் சரியான வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆனால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேர்வு கட்டணம் கட்ட கல்வி கற்கும் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்வு கட்டணமும் செலுத்திவிட்டோம். அடுத்த 3 நாட்களில் தேர்வு நடைபெறுவதாக அறிவித்து, தேர்வு எழுதுவதற்கான மையங்களை அறிவித்துள்ளனர். இதுவரை பாடங்கள் எதுவும் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. அதோடு, 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு என்பதால், பாடத்திட்டங்களும் அதிகமாக உள்ளன. பாடத்திட்டங்களும் குறைக்கப்படவில்லை.
இந்நிலையில் பாடமும் நடத்தாமல், பாடத்திட்டமும் குறைக்காமல், தேர்வு எழுதக் கூறினால் எப்படி எழுதுவது. தங்களுக்கு இணையதளம் மூலம் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் எங்களுக்கு 6 மாத கால அவகாசம் வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக இந்தத் தேர்வில் 98 சதவீதம் பேர் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் செய்த குளறுபடியே காரணம். அவர்கள் விடைத்தாள் திருத்துவதில் கொண்டுவந்துள்ள பல மாற்றங்களால் தான் இப்படிப்பட்ட நிலை. விடைத்தாள் திருத்தும்போது ஒரு கமா, ஒரு புள்ளி, வைக்கவில்லை என்றாலும் அந்த முழு விடைக்கும் மதிப்பெண் கிடையாது, என்பது உள்ளிட்ட பல்வேறு கடுமையான விதிமுறைகளை வைத்துள்ளனர்.
எனவே இதுகுறித்து நாங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். அதேபோல் தற்போது நடக்கும் தமிழக கூட்டத்தொடரில் இதுகுறித்து பேசச் சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடியுள்ளோம் என்று தெரிவித்தனர்’ என்று தெரிவித்தனர்.