திண்டுக்கல்லில் ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அதிகாரியை போலீசார் அதிரடி கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைபாடியைச் சேர்ந்தவர் டேஸ்மி கிறிஸ்டினா. இவர் வட மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் திண்டுக்கல் முத்தழகுபட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஆறு மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணியிடம், இது குறித்து டேஸ்மி கிருஷ்டினா புகார் தெரிவித்தார்.
அப்போது அவர் உங்களுக்குச் சேர வேண்டிய நிலுவை சம்பளத் தொகை மற்றும் பணம் பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டேஸ்மி கிருஷ்டினா, இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரியை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஆசிரியையிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அந்தப் பணத்தை மாவட்ட கல்வி அதிகாரிகளும் கொடுக்கும்படி கூறினார். இதற்கிடையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அங்குச் சென்ற ஆசிரியை டேஸ்மி கிருஷ்டினா தான் கொண்டுவந்த ஐந்து ஆயிரத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணி திடீரென தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறியதன் பேரில் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.