கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரபலமான கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். குறிப்பாக அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் குழந்தைகள் இங்குப் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சீட் கிடைப்பது சற்று கடினம் என்றே சொல்லப்படுகிறது. அதே போல், இங்கு படிக்கக் கூடிய மாணவ மாணவிகள் அகில இந்திய அளவில் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்பதால், இந்த பள்ளியில் சேர்ப்பதற்குப் பெற்றோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்படி பிரபலமான பள்ளியில் மாணவிக்கு அரங்கேறிய ஒரு சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ராமச்சந்திர சோனி. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கேந்திர வித்யாலயா பள்ளியில் கலை பிரிவு பாடங்களை நடத்தி வந்தார். இந்த ஆசிரியர் மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தாமல், அவர்களைத் தவறான நோக்கத்தில் பயன்படுத்தி வந்திருக்கிறார். மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் பேசும் ராமச்சந்திர சோனி அவர்களிடம் அடிக்கடி ஆபாசமாகப் பேசி வந்துள்ளார். அதன் நீட்சியாக, அந்த பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என ராமச்சந்திர சோனி மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவி இந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
ஒருகட்டத்தில், ஆசிரியர் சோனியின் தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கலை ஆசிரியர் ராமச்சந்திர சோனி அந்த 8ஆம் வகுப்பு மாணவி மட்டுமின்றி அந்த பள்ளியில் ஏராளமான மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். மேலும், அந்த மாணவிகளுக்கு ராமச்சந்திர சோனி மிரட்டல் விடுத்து விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் ராமச்சந்திர சோனி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த பிரச்சினை பள்ளியில் பூதாகரமாக வெடித்ததுடன் மாணவிகளின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.
தற்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ராமச்சந்திர சோனியைக் கைது செய்ததுடன் அவர் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.